11. காடுகாண் காதை
மூவரும் சென்று மறையோன் கூறிய இடைநெறியிற் போகும் பொழுது, கோவலன் நீர் வேட்கையால் ஓர் பொய்கைக் கரையை அடைந்து நிற்புழி, அக் கானுறை தெய்வம் வயந்தமாலை வடிவுடன் சென்று பல பணிமொழி கூறி மயக்காநிற்க, கோவலன், மயக்குந் தெய்வம் உளதென்று மறையோன் கூறக் கேட்டுளனாதலின், வஞ்ச வுருவை மாற்றும் கொற்றவையின் மந்திரத்தைக் கூறினன். கூற, அத் தெய்வம் தன்னியல்பினை யுரைத்து வணங்கிச் சென்றது. மூவருஞ் சென்று ஐயை கோட்டம் ஒன்றினை அடைந்தனர்.]
[மூவரும்
ஐயை கோட்டத்தின் ஒருபுடை இளைப்பாறி இருந்தனராக, இப்பால், வேட்டுவக் குடியில்
தெய்வத்திற்கு வழிபாடு செய்யும் உரிமையுடைய சாலினி யென்பாள் தெய்வ மேறப்பெற்று,
'எயினர் மன்றுகள் பாழ்பட்டன ; கடன் உண்ணின் அல்லது கொற்றவை வெற்றி கொடாள்
; ஆகலின் நீர் செலுத்தற்குரிய கடனைச் செலுத்துவீராக' என்றாள். என்றலும், எயினரனைவரும்
கூடித் தங்கள் தொல்குடிப் பிறந்த குமரியைக் கொற்றவையாக ஒப்பனை செய்து பரவிக்
கை தொழுது ஏத்தினர். அப்பொழுது சாலினி தெய்வமுற்றுக் கோயிலின் ஒரு சிறை கணவனோடிருந்த
கண்ணகியை நோக்கி, 'இவள், கொங்கச் செல்வி குடமலை யாட்டி, தென்றமிழ்ப்
பாவை செய்த தவக்கொழுந்து, .... ' என்று பின் நிகழ்வதறிந்து கூறக், கண்ணகி
' மூதறிவாட்டி பேதுறவு மொழிந்தனள்' என்று புன் முறுவலுடன் கணவன் புறத்தொடுங்கி
நின்றனள். குமரிக் கோலத்துக் குமரியும் வரிக்கோலம் நன்கு வாய்த்ததென்று கண்டார்
சொல்ல அருளினள். வேட்டுவர்கள் கொற்றவையின் பல புகழையும் கூறிப் பரவி, 'விறல்
வெய்யோன் வெட்சி சூடுக' எனத் தம் அரசனை வாழ்த்தினர். (இதன்கண் வேட்டுவர்
கொற்றவையை ஏத்துவனவாகவுள்ள பாட்டுக்கள் மிக்க சிறப்புடையன.)]
3.
புறஞ்சேரியிறுத்த காதை
[குமரியின்
கோலம் நீங்கிய பின்பு, பாண்டியர் காக்கும் நாட்டிலே புலி முதலிய கொடிய உயிர்களும்
சார்ந்தவர்க்கு இடுக்கண் செய்யாவாகலின், பகல் வெயிலிற் செல்லாது இரவு நிலவொளியிற்
செல்வேம்' எனத் துணிந்து, மூவரும் இரவின் வருகையை எதிர் பார்த்திருக்க, 'மலயத்
தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு வானிலா வெண்கதிர்
பாவைமேற் சொரி'ந்தன. கோவலன் கண்ணகி கையைத் தன் தோளில் சேர்த்திச்
செல்ல, மூவரும் வைகறைப் பொழுதிலே, தமக்குரிய ஒழுக்கத்தின் வழுவிய பார்ப்பன
ருறையும் ஒரு பகுதியைச் சேர்ந்தனர். முள்வேலி சூழ்ந்த காவலிடத்தே கவுந்தியையும்,
கண்ணகியையும் இருக்கச் செய்து, கோவலன் காலைக்கடன் கழித்தற் பொருட்டு ஓர்
நீர் நிலையை அடைந்தனன். மாதவியால் விடுக்கப்பட்டு வந்த கௌசிகன் என்னும்
அந்தணன் அவ் விடத்துக் கோவலனைக் கண்டு, அவன் பிரிவால் அவனுடைய தாய் தந்தையர்
எய்திய அளவற்ற துன்பத்தையும் வசந்தமாலை கூறிய சொற்கேட்டதும் மாதவி பள்ளியில்
மயங்கி வீழ்ந்ததனையும், மாதவியால் அனுப்பப்பட்டுத் தான் தேடி வந்ததையும் கூறி,
மாதவியின் ஓலையை அவன் கையில் நீட்டினன். கோவலன் அதன் பொருளை உணர்ந்து,
மாதவி தீதிலளெனத் தெளிந்து தளர்ச்சி நீங்கி, அவ் வோலையின் வாசகம் தம்
பெற்றோருக்கும் பொருந்தி யிருந்தமையின், எம் குரவர் மலரடியைத் திசை நோக்கித்
தொழுதேன் எனச் சொல்லி இவ் வோலையைக் காட்டு' என அதனைக் கௌசிகன் கையிற்
கொடுத்து விடுத்து, கவுந்தியும் கண்ணகியும் இருக்குமிடத்தை யெய்தி, அங்குள்ள பாணர்களுடன்
தானும் சேர்ந்து யாழ் வாசித்து, 'மதுரை இன்னும் எத்துணைக் காவதம் உள்ளது கூறுமின்'
என்ன, அவர்கள் 'மதுரைத் தென்றல் வந்தது காணீர்; பாண்டியன் மூதூர் அண்மைக்
கண்ணதே' என்று கூறவும், கூடலின்கண் எழும் பலவகை ஒலியும் கடலொலிபோல் எதிர்
கொள்ளத் துன்பம் நீங்கிச் சென்று, வையை யாற்றை மரப்புணை யாற் கடந்து தென்
கரையை யெய்தி, மதுரையின் மதிற்புறத்ததாகிய புறஞ்சேரியிற் புக்கனர். (இதன்கண்
வையைக் கரையின் இயற்கை வனப்பு முதலியன கற்போர்க்கு இன்பம் விளைப்பன.)]
|
4.
ஊர்காண் காதை
க்
[பொழிலும் கழனியும் புட்கள் எழுந்தொலிக்க ஞாயிறு கீழ்த் திசைத் தோன்றியது.
இறைவன் கோயில் முதலியவற்றில் வலம் புரிச் சங்கும் காலை முரசும் ஒலித்தன.
கோவலன் கவுந்தி யடிகளை வணங்கித் தான் உற்ற இடும்பையை உரைத்து, யான் இந்
நகர் வணிகர்க்கு எனது நிலையை உணர்த்தி வருகாறும், இப் பைந்தொடி நுமது பாதக்
காப்பினள்' என்று கூறினன்; கூறக், கவுந்தி யடிகள் உலகிலே மக்களெய்தும் இன்ப
துன்பங்களின் காரணங்களை எடுத் துரைத்து, முன்னரும் துன்பமுற்றோர் பலர் என்பதற்கு
இராமனை யும் நளனையும் எடுத்துக் காட்டி, நீ அவர்கள்போல்வாயு மல்லை; மனைவியுடன்
பிரியா வாழ்க்கை பெற்றனை ; ஆகலின் வருந்தாது ஏகிப் பொருந்துமிடம் அறிந்து
வருக' என்றனர்; என்றலும், கோவலன் மதிலக வரைப்பிற் சென்று, கடைகழி மகளிர்
காதலஞ் செல்வருடன் காலையிற் புனல் விளையாடியும், நண்பகலிற் பொழில் விளையாட்டயர்ந்தும்,
எற்படுபொழுதில் நிலா முற்றத்திற் சேக்கை மீதிருந்தும், முன்பு தமக்கின்பம்
விளைத்த கார் முதலிய பருவங் களின் வரவை எண்ணி இன்புறும் முதுவேனிற் கடைநாளில்
அரசன்பாற் சிறப்புப் பெற்ற பொற்றொடி மடந்தையருடன் புது மணம் புணர்ந்து செழுங்குடிச்
செல்வரும் வையங் காவலரும் மகிழா நிற்கும் வீதியும், எண்ணெண் கலையு முணர்ந்த
பரத்தையரின் இரு பெருவீதியும், அரசனும் விரும்பும் செல்வத்தையுடைய அங்காடி வீதியும்,
பயன் மிக்க இரத்தினக்கடை வீதியும், பொற்கடை வீதி யும், அறுவை வீதியும்,
கூல வீதியும், நால்வேறு தெருவும், சந்தி யும், சதுக்கமும், மன்றமும், கவலையும்,
மறுகும் திரிந்து காவலன் பேரூரைக் கண்டு மகிழ்ந்து புறஞ்சேரிக்கண் மீண்டனன்.
(இதில் இரத்தினக் கடைத்தெரு கூறுமிடத்தே 180-200 அடிகளில் நவ மணிகளின் இலக்கணம்
கூறப்பெற்றுள்ளது.)]
|
[புறஞ்சேரியிற்
புக்க கோவலன் கவுந்தியடிகட்கு மதுரையின் சிறப்பையும் பாண்டியன் கொற்றத்தையும்
கூறும்பொழுது, தலைச் செங்கானத்து மறையவனாகிய மாடலனென்போன் குமரியாடி மீண்டு
வருபவன் வழிநடை வருத்தம் நீங்கக் கவுந்தியிருக்குமிடத்தை அடைந்தான். கோவலன்
அவனைக் கண்டு வணங்க, அவன் கோவலனை நோக்கி, மாதவி மகட்கு மணிமேகலை யென்று
பெயரிட்டு வாழ்த்தித் தானம் கொடுக்கும்பொழுது தானம் பெறுதற்கு வந்த முதுமறையோனை
மதயானை பற்ற அதன் கையினின்றும் அவனை விடுவித்து, அதன் கையகத்தே புக்குக் கோட்டிடையொடுங்கிப்
பிடரில் ஏறி அதனை அடக்கிய கருணை மறவனே! தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக்
காத்ததுமாகிய கீரியைப் பிறழ உணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட
பார்ப்பனியின் பாவம் நீங்கத் தானஞ்செய்து, கணவனை அவளுடன் கூட்டி, அவர்கள்
வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்த செல்லாச் செல்வனே! பத்தினி ஒருத்தி
அடாப்பழி யெய்தப் பொய்க்கரி கூறிச் சதுக்கப் பூதத்தாற் கொல்லப்பட்டவனுடைய
தாயின் துயர் நீங்க அவன் சுற்றத்தோர்க்கும் கிளைகட்கும் பொருளீந்து பல்லாண்டு
புரந்த இல்லோர் செம்மலே! யானறிய நீ இம்மையிற் செய்தன வெல்லாம் நல்வினையாகவும்
இம் மாணிக்கக் கொழுந்துடன் 'நீ இங்ஙனம் போந்தது உம்மைப் பயனோ ?' என வினவ,
கோவலன் தான் கண்ட தீக்கனாவைக் கூறி, அதன் பயனாய துன்பம் விரைவில் உண்டாகுமென்றுரைக்க,
மறையவனும் கவுந்தியும் இவ்விடம் துறந்தோர்க்கே உரியதாகலின், நீ மதுரையிற்
புகுக' என்று கூறினர். அப்பொழுது அங்கு வந்த ஆயர் முதுமகளாகிய மாதிரி கவுந்தியடிகளைக்
கண்டு வணங்கினாள். கொடுமையில்லாத வாழ்க்கையையுடைய கோவலர் குடியின் முதுமகளும்
செவ்வியளுமாகிய இவளிடத்துக் கண்ணகியை இருத்துதல் குற்றமின்றென எண்ணி, கண்ணகியின்
உயர்வையும் கற்பின் சிறப்பையுங் கூறி, தவத்தினரது அடைக்கலத்தைப் பாதுகாத்தலால்
எய்தும் பெரும்பயனுக்கு ஓர் வரலாற்றையும் காட்டி, அவளை மாதரிபால் ஒப்புவிக்க,
அவள் கவுந்தியை ஏத்தி நங்கையுடன் தன் மனையை அடைந்தாள்.]
6.கொலைக்களக்
காதை
[மாதரி கண்ணகியையும்
கோவலனையும் புதிய மனை யொன்றில் இருத்தித் தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத்
துணையாக வைத்து அடிசிலாக்குதற்கு வேண்டும் பொருள்களை அளிக்க, கண்ணகி நன்கு சமைத்துக்
கணவனை முறைப்படி உண்பித்து அவற்கு வெற்றிலை பாக்கு அளித்து நின்றனள். அப்பொழுது
கோவலன் கண்ணகியை அருகணைத்து 'நீ வெவ்விய காட்டிலே போந்ததற்கு என் தாய்
தந்தையர் என்ன துன்பமுற்றார்களோ' என்று கூறி, தான் முன் நெறி தவறி நடந்தமைக்கு
இரங்கி, 'ஈங்கு என்னொடு போந்து என் துயர் களைந்த பொன்னே! கொடியே! புனைபூங்
கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற் பின்
செல்வி! நான் நின் சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டுபோய் விற்று வருவேன்;
மயங்காதிரு' எனத் தேற்றி, அரிதின் நீங்கிச் செல்வானாயினன். செல்பவன் பீடிகைத்
தெருவிலே பொற் கொல்லர் நூற்றுவர் பின்வர முன்வந்த ஒரு பொற்கொல்லனைக் கண்டு,
விற்பதற்குத் தான் கொணர்ந்த சிலம்பினைக் காட்ட, அப் பொற்கொல்லன் அரசன்
மனைவியின் சிலம்பொன்றைக் கவர்ந்தவனாதலால் தனது களவு வெளிப்படு முன் இச்
சிலம்பால் தன்மீது உண்டாகும் ஐயத்தைத் தவிர்க்கலாமெனத் துணிந்து 'கோப்பெருந்தேவி
அணிதற்கேற்ற இச் சிலம்பினை நான் அரசனுக் கறிவித்து வருங்காறும் இவ்விடத்திருப்பீர்'
எனத் தன் மனையின் பக்கத்திலுள்ள கோயிலில் இருத்திச் சென்றனன். சென்றவன்,
தன் தேவியின் ஊடல் தணித்தற் பொருட்டு அவள் கோயிலை நோக்கிச் சென்றுகொண்
டிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் கண்டு, 'கோயிலில் இருந்த சிலம்பினைத் திருடிய
கள்வன் அச் சிலம்புடன் அடியேன் குடிலில் வந்துளான்' என்று கூற, அரசன், 'அவனைக்
கொன்று அச் சிலம்பினைக் கொணர்வீர்; எனக் காவலாளர்க் குரைத்தனன். பொற்
கொல்லன் மகிழ்ந்து அக் காவலாளருடன் சென்று கோவலனை அணுகி, 'அரசன் ஏவலாற்
சிலம்பு காண வந்தோர் இவர்' எனக் கூறி, அச் சிலம்பினைக் காட்டுவித்து, 'முகக்குறி
முதலியவற்றால் இவன் கள்வனல்லன்' என்று கூறியவர்களை இகழ்ந்துரைத்து, களவு நூல்
கூறும் ஏதுக்களை யெல்லாம் எடுத்துக் காட்டி அவனைக் கள்வனென்று வற்புறுத்தினன்
; அப்பொழுது அறிவற்ற தறுகணனொருவன் தன் கை வாளாற் கோவலனை வெட்டி வீழ்த்தினன்.
(இதில், கண்ணகி கோவலனை உண்பித்ததும், கோவலன் கூற்றுக்கு மறு மொழி கூறியதும்
அவளது உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன.]
7.ஆய்ச்சியர்
குரவை7.
ஆய்ச்சியர் குரவை
|
[ஆயர்
சேரியில் பலவகை உற்பாதங்கள் நிகழ்ந்தன. மாதரி தன் மகள் ஐயையை நோக்கி,
முன்பு ஆயர்பாடியில் கண்ணனும் பலராமனும் பின்னையுடன் ஆடிய குரவையை நாம் இப்பொழுது
கறவை கன்று துயர் நீங்குகவென ஆடுவேம் எனக் கூறி, எழுவர் கன்னியரை நிறுத்தி ஏழிசைகளின்
பெயர்களாகிய குரல் முதலிய வற்றை அவர்கட்குப் பெயர்களாக இட்டு, அவருள் குரலாகியவளைக்
கண்ணன் என்றும், இளியாகியவளைப் பலராமன் என்றும், துத்தம் ஆகியவளைப் பின்னை
என்றும், ஏனை நரம்புகளாகியோரை மற்றை நால்வர் என்றும் படைத்துக்கோட் பெயரிட,
அவர்கள் கற்கடகக் கை கோத்து நின்று மாயோனைப் பாடிக் குரவை யாடினர். (இதிலே,
முன்னிலைப் பரவலும் படர்க்கைப் பரவலுமாகத் திருமாலைப் பாடிய பாட்டுக்கள் மிகவும்
அருமையானவை.)]
[கதிரோன் கூறியதைக்
கேட்ட கண்ணகி, மிக்க சினங்கொண்டு, தன்பால் இருந்த மற்றொரு சிலம்புடன் புறப்பட்டு
மதுரையின் வீதிவழியே சென்று, அங்குள்ள மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி, 'என்
கணவனை முன்போலக் கண்டு அவன் கூறும் நல்லுரையைக் கேட்பேன்; அங்ஙனம் கேளேனாயின்
என்னை இகழுமின்' என்று சூள் கூறிச் சென்று, வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர்
காட்டக் கண்டு அளவிலாத் துயரெய்தி, அவனை முன்னிலையாக்கிப் பலவாறு புலம்பி
அவன் உடம்பைத் தழுவிக் கொள்ள, அவ்வளவில் அவன் எழுந்து நின்று 'மதிபோன்ற
நின் முகம் வாடியதே' என்று சொல்லிக் கையாள் அவள் கண்ணீரை மாற்ற, அவள் கணவனுடைய
அடிகளை இரண்டு கையாலும் பற்றி வணங்கினாள் ; அப்பொழுது அவன் 'நீ இங்கிருக்க'
என்று சொல்லி, அவ் வுடம்பை யொழித்து, அமரர் குழாத்துடன் துறக்கம் புகுதற்குச்
சென்றான். கண்ணகி 'என் சினந் தணிந்தன்றிக் கணவனைக் கூடேன்; தீமையுடைய அரசனைக்
கண்டு இதனை உசாவுவேன்' என்று அரசன் கோயில் வாயிலை அடைந்தாள். (இதன் அவலச்சுவை
கன்னெஞ்சையும் கரைக்க வல்லது).]
[கோப்பெருந்தேவி தீக்கனாப் பல கண்டு அவற்றை அரியணை மீதிருந்த தன் கணவனிடம்
கூறிக்கொண்டிருந்தாள். அப்பொழுது பெருஞ் சீற்றத்துடன் வாயிலை யடைந்த கண்ணகி
தன் வரவை வாயில் காப்போனால் அரசனுக்கு அறிவித்துச் சென்று முன்னின்று, அவன்
கேட்பத் தன் ஊர், பெயர் முதலியவற்றையும், தன் கணவனை அவன் ஆராயாது கொன்ற
கொடுங்கோன்மையையும் அஞ்சாது இடித்துரையால் எடுத்தியம்பி, தன் கணவன் கள்வனல்ல
னென்று தெரிவித்தற்பொருட்டுத், தன் சிலம்பினுள் உள்ள பரல் மாணிக்கம் என்றாள்
; அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத் தென்று கூறி, கோவலனிடமிருந்து கொண்ட
சிலம்பை வருவித்து வைக்க, கண்ணகி அதனை உடைத்தாள் ; உடைக்க, அதிலுள்ள மாணிக்கப்
பரல் அரசன்முன் தெறித்தது ; அது கண்ட நெடுஞ் செழியன் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன்
சொற் கேட்ட கொடுங்கோன்மையையுடைய யானோ அரசன்! யானே கள்வன் ; தென்புலம்
காவல் என் முதற் பிழைத்தது ; இன்றே கெடுக என் ஆயுள்' எனக் கூறித் துயருற்று மயங்கித்
தான் அமர்ந்த அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சினான் ; அது கண்ட அரசன் மனைவி
கணவனை இழத்தலாகிய கொடுந் துன்பத்தை எண்ணி வருந்தி, அவன் இணையடிகளைத் தொழுது
தானும் விழ்ந்தனள்.]
[கண்ணகி
நடுங்கி வீழ்ந்த கோப் பெருந்தேவியை விளித்து, 'யான் ஒப்பற்ற கற்புடை மகளிர்
பலர் பிறந்த பதியின்கட் பிறந்தேன் ; யானும் ஓர் பத்தினியாயின் அரசோடு
மதுரையையும் ஒழிப்பேன் ' என்று கூறி, அவ்விடம் விட்டு நீங்கி, 'மதுரையிலுள்ள
மகளிர் மைந்தர் கடவுளர் மாதவர் அனைவீரும் கேண்மின் ; என் காதலனைக் கொன்ற
அரசன் நகரினைச் சீறினேன் ஆகலின் யான் குற்றமிலேன் 'என்றுரைத்து, தனது இடக்
கொங்கையைக் கையாலே திருகி, மதுரையை மும்முறை வலம் வந்து, சுழற்றி எறிந்தாள்
; அப்பொழுது அங்கியங்கடவுள் வெளிப்பட்டு, 'பத்தினியே, நினக்குப் பிழை செய்த
நாளில் இந் நகரினை எரியூட்ட முன்பே ஓர் ஏவல் பெற்றுளேன் ; இதன் கண் பிழைத்தற்குரியார்
எவ்வெவர்' என்று உசாவ, 'பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர்
குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீயோர் பக்கம் சேர்க' என்று கண்ணகி ஏவக்
கூடல் நகரிலே அழல் மண்டிற்று. (இதன்கண் புகார் நகரிலிருந்த பத்தினிப் பெண்டிர்
எழுவர் வரலாறு கூறப்பட்டிருப்பது அறிந்து மகிழ்தற்குரியது.) ]
[அரசர் பெருமானாகிய நெடுஞ்செழியன்
தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சியதை அறியாது ஆசான் முதலாயினார் ஓவியத்திரள்
போல் உரை அவிந்திருந்தனர் ; காழோர் முதலாயினார் கோயில் வாயிலில் வந்து
நெருங்கினர் ; நால் வகை வருணப் பூதங்களாகிய தெய்வங்களும் அந் நகரை விட்டு
நீங்கின ; அறவோர்கள் உள்ள இடங்களை விடுத்து, மறவோர் சேரிகளில் எரி மண்டியது
; அந்தி விழவும் ஆரண வோதையும் முதலியவை நீங்கின ; நகரின் கண் காதலனை இழந்த
துன்பத்துடன் உள்ளம் கொதித்து வீரபத்தினி மறுகு முதலியவற்றிற் சுழன்று திரிந்தனள்
; அப்பொழுது அவள்முன் எரியின் வெம்மையைப் பொறாத மதுராபதி யென்னும் தெய்வம்
வந்து தோன்றினள். (வருணப் பூதர் நால்வருடைய இயல்புகளும் இதன்கண் கூறப்பட்டுள்ளன.)]
[கண்ணகிபால் வந்து தோன்றிய மதுராபதி அவளை நோக்கி 'யான்
மதுரையின் அதி தெய்வம் ; நின் கணவற் குண்டாகிய துன் பத்தால் எய்திய கவற்சியுடையேன்
; இந் நகரத்திருந்த பாண்டி மன்னர்களில் ஒருவரேனும் சிறிதும் கொடுங்கோன்மை
யுடையரல்லர் ; இந் நெடுஞ் செழியனும் 'மறை நாவோசையல்லது யாவதும் மணி நா வோசை
கேட்ட' றியாத செங்கோன்மை யுடையனே ; இவ்வாறு நிகழ்ந்ததற்குக் காரணம் ஊழ்வினையே
யாகும் ; அதன் வரலாற்றைக் கூறுவேன் கேள் ; முன்பு கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தினும்
கபிலபுரத்தினு மிருந்த தாய வேந்தராகிய வசு என்பவனும் குமரன் என்பவனும் தம்முள்
பகை கொண்டு ஒருவரை யொருவர் வெல்லு தற்கு முயன்றுகொண்டிருந்தனர் ; அதனால் இருவரூர்க்கும்
இடைப் பட்ட ஆறு காத எல்லையில் யாரும் இயங்காதிருக்கவும், சங்கமன் என்னும்
வணிகன் பொருளீட்டும் வேட்கையால் தன் மனைவியோடு காவிற் சென்று சிங்கபுரத்தின்
கடை வீதியில் அரிய கலன்களை விற்றுக்கொண்டிருந்தனன் ; அப்பொழுது அரசனிடத்துத்
தொழில் செய்துகொண்டிருந்த பரதன் என்பவன் அவ் வணிகனைப் பகைவனுடைய ஒற்றனென்று
பற்றிச் சென்று அரசனுக்குக் காட்டிக் கொன்றுவிட்டனன் ; கொல்லப்பட்ட சங்கமன்
மனைவியாகிய நீலி என்பவள் மிக்க துயரத்துடன் முறையிட்டுக்கொண்டு எங்கணும் திரிந்து
பதினான்கு நாள் சென்றபின் ஓர் மலையின் உச்சியை அடைந்து கணவனைச் சேர்தற்
பொருட்டுத் தன் உயிரைவிடத் துணிந்தவள் 'எமக்குத் துன்பஞ் செய்தோர் மறுபிறப்பில்
இத் துன்பத்தை யடைவாராக' எனச் சாபமிட்டிறந்தனள் ; அப் பரதன் நின் கோவலனாகப்
பிறந்தான் ; ஆதலால் நீங்கள் இத் துன்பத்தை அடைந்தீர்கள் ; நீ இற்றைக்குப்
பதினான்காவது நாளில் பகல் சென்றபின் நின் கணவனைக் கண்டு சேர்வாய்' எனச்
சொல்லிச் சென்றது சென்றபின், கண்ணகி 'கீழ்த்திசைவாயிற் கணவனொடு புகுந்தேன்,
மேற்றிசைவாயில் வறியேன் பெயர்வேன்' எனக் கையற்று ஏங்கி மதுரையை நீங்கி,
வையைக்கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று, மலைநாட்டிலுள்ள திருச்செங்குன்
றென் னும் மலை மீதேறி ஒரு வேங்கை மரத்தின்கீழ் நின்று, பதினாலாம் நாட் பகற்பொழுது
சென்றபின் அங்கே தெய்வ வடிவுடன் போந்த கோவலனைக் கண்டு அவனுடன் வானவூர்தியிலேறித்
தேவர்கள் போற்றத் துறக்கம் அடைந்தனள். (இதில் பாண்டியர்களுடைய நீதியை உணர்த்துதற்குப்
பொற்கை வழுதியின் வரலாறும், சேரன் பாற் பரிசில் பெற்றுவந்த சோணாட்டுப்
பார்ப்பானாகிய பராசரன் என்பானுக்குத் தங்கால், வயலூர் என்னும் ஊர்களை அளித்த
மற்றொரு பாண்டியன் வரலாறும் கூறப்பட்டுள்ளன. மதுரை இன்ன நாளில் எரியுண்ணும்
என்பதோர் உரையுண்டென்பதும் கூறப்பட்டுளது.)]
|
No comments:
Post a Comment