எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன்

ஏமன் நாட்டின் அதிகாரபூர்வப் பெயர் ஏமன் குடியரசு. தென் மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அரபு நாடு இது. அரேபிய தீபகற்பத்தின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. (முதலாவது - சவுதி அரேபியா).

வடக்கே சவுதி அரேபியா, தெற்கே அரேபியக் கடல், மேற்கே செங்கடல், கிழக்கே ஓமன் என்று இந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சனா அதுதான் ஏமன் நாட்டின் தலைநகர்.

ஒரு வெள்ளிக்கிழமை - மார்ச் 20, 2015. அன்று சனாவில் நடைபெற்றது ஒரு மாபெரும் விபரீதம். அந்த நகரின் மையத்தில் இரண்டு பெரும் மசூதிகள் இருந்தன. ஒவ்வொரு மசூதியையும் நோக்கி இரண்டு பேர் கிளம்பினார்கள். இந்த நால்வருமே மனித வெடிகுண்டுகள். அதாவது கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள். தீவிரவாதம் தவறல்ல எனறு மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள்.

அன்று வெள்ளி மதியம் என்பதால் அந்த மசூதிகளில் வழிபாட்டுக்காக பல முஸ்லிம்கள் கூடியிருந்தனர். மனித வெடிகுண்டுகள் வெடித்தன. 130 பேர் அந்த நொடியிலேயே இறந்தனர். இவர்களில் குழந்தைகளும் உண்டு.

வழிபாடு செய்து கொண்டிருந்தவர்கள் யார்? சந்தேகமில்லாமல் முஸ்லிம்கள்.

மனித வெடிகுண்டுகளாக மாறி அவர்களைக் கொன்றது யார்? அவர்களும் முஸ்லிம்கள்தான்.

எதனால் இந்த விபரீதம்? யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் யுத்தம் தொடர்ந்து நடப்பதை இஸ்ரேல்-பாலஸ்தீன் நாடுகளில் பார்க்கிறோம். எதனால் ஏமன் நகரில் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் பகைமைவெறி கொள்ள வேண்டும்?

ஏமன் நாட்டின் தலைநகரம் சனா என்றோம். ஆனால் நீங்கள் அந்த நாட்டின் தலைநகருக்கு இப்போது போக வேண்டுமானால் ஏடன் என்ற துறைமுக நகரத்துக்குத்தான் போக வேண்டும். (இது தெற்கு கடற்கரையில் உள்ளது).

என்ன ஆனது? தலைநகரம் மாறி விட்டதா? நடைமுறையில் அப்படித்தான். பிப்ரவரி 2015-ல் இருந்து இந்த மாற்றம். காரணம் அந்த நகரில் நடைபெற்றுவரும் கிளர்ச்சி. கிளர்ச்சியாளர்கள் சனாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இதனால் ஏமன் நாட்டின் தலைநகரம் தாற்காலிகமாக ஏடன் நகருக்கு மாற்றப்பட்டு விட்டது. கலவரம் ஓய்ந்ததா? அடப்போங்க.

பின்னணி என்ன? பார்ப்போம்.

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகியவை சந்திக்கும் இடமாக ஏமன் உள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மசாலாப் பொருட் களுக்கான கடல் வழிப் பாதையாக ஏமன் இருந்திருக்கிறது.

ரோமானியர்கள் இந்தப் பகுதியை ‘அரேபியா பெலிக்ஸ்’ என்று அழைத்தார்கள்.

பைபிளில் ஷேபா என்று ஓர் இனத்தைக் குறிப்பிட்டிருககிறார்கள். அவர்களின் தாயகமாகத்தான் ஏமன் இருந்திருக்கிறது. இப்போதைய ஏமன் மட்டுமல்ல, எத்தியோபியா, எரித்ரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகள்கூட ஏமனின் பகுதியாக அப்போது இருந்தது.

கி.பி.275ல் யூதர்களின் ஆட்சிக்கு உள்ளானது.

ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இப்படிப் பரவ முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது ஏமன் ராணுவமும்தான். அதைச் சேர்ந்த பலரும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறிவிட்டனர்.

அதற்குப் பிறகு பல சாம்ராஜ்யங்களின் பிடியில் மாறி மாறித் திணறியது ஏமன். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டாமன் சாம்ராஜ்யம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆகிய இரண்டுமே ஏமனைத் துண்டாடின. தொடக்கத்தில் வடக்கு ஏமன் மட்டும்தான் சுதந்திர நாடாக - ஏமன் குடியரசாக - மாற்றம் கண்டது. அப்போதும்கூட தெற்கு ஏமன் பிரிட்டிஷாரின் பிடியில்தான் இருந்தது. 1990-ல்தான் இரண்டு ஏமனும் இணைந்து தற்போதைய நவீன ஏமன் குடியரசாக மாறின.

இப்போது ஏமனில் நடைபெறும் கலவரங்களுக்கு முக்கிய காரணம் வேறு இரண்டு நாடுகளுக்குள் உண்டான பகைமை என்றும் கூறலாம். அவை, சவுதி அரேபியா, ஈரான்

ஏமனில் தற்போது நடைபெறும் கலவரங்களின் ஆணிவேர் என்று இஸ்லாமின் இரு பிரிவுகளுக்கிடையே உள்ள விரோதத்தைக் கூறலாம்.

இஸ்லாமிய மார்க்கத்தின் சன்னி, ஷியா ஆகிய இரு பிரிவினருமே (முக்கிய மாக அவற்றின் பல தலைவர்கள்) ஒருவரை யொருவர் கடும் பகைவர்களாகத்தான் பார்க்கிறார்கள். எதனால் இந்தப் பிளவு? பல்வேறு நாடுகள் பற்றிய விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் இந்தப் பகுதியில் ஏற்கெனவே இது குறித்து நாம் ஓரளவு விளக்கியிருந்தாலும் இப்போது அதை மேலும் விளக்கமாக அறிந்து கொண்டால்தான் ஏமனில் நடக்கும் கலவரங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

முகமது நபிகள் பரப்பிய இஸ்லாமிய மார்க்கம் அவருக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்து நின்றது. நபிகள் நாயகத்தின் அடுத்தடுத்த வாரிசுகள் யாராக இருக்க வேண்டும்? இதில்தான் கருத்து வேறுபாடுகளும் பிளவும்.

ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் காலிஃப் (அதாவது முகமது நபியின் வாரிசுகள்) தங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். இவர்கள் தங்களை `சன்னி’ என்று அறிவித்துக் கொண்டனர்.

இரண்டாவது பிரிவினர் தங்களை `ஷியா’ என்று கூறிக் கொண்டனர். இவர் களைப் பொருத்தவரை முகமது நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான் தங்கள் தலைவர்களாக இருக்க வேண்டும். அல்லது அந்தப் பரம்பரையினர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர் தலைவராக இருக்கலாம்.

சன்னி, ஷியா ஆகிய இரு பிரிவினருக் குமே பல அடிப்படை ஒற்றுமைகள் உண்டு. இருதரப்பினருமே நபிகள் நாயகத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள். ஹஜ் யாத்திரையை முக்கியமானதாகவும், புனிதமானதாகவும் கருதுபவர்கள். என்றாலும் வேறு சில வேறுபாடுகள் பூதாகரமாகி விட்டன.

அப்படி என்ன இந்த இரண்டு பிரிவுகளுக்கிடையே வேறுபாடு? தெரிந்து கொள்வோம். சன்னி முஸ்லிம்கள் தங்களை இஸ்லாம் மார்க்கத்தின் தொன்மையான பிரிவினர் என்று கருதுகிறார்கள். சொல்லப் போனால் சன்னி என்ற வார்த்தையே “அஹ்ல் அல்-சுன்னா’’ என்ற வார்த்தை யிலிருந்து உண்டானதுதான். இதன் பொருள் தொன்மையான மக்கள் என்பதா கும். தொன்மை என்றால்? நபிகள் நாயகத் தின் செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவது. நபிகள் நாயகத்தைத்தான் இறுதியான இறைத்தூதர் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

ஷியா பிரிவு ஓர் அரசியல் பிரிவாகவே தொடக்கத்தில் கருதப்பட்டது. `ஷியட் அலி’ என்ற வார்த்தைகளிலிருந்து உருவானது தான் ஷியா என்ற சொல். ஷியட் அலி என்றால் அலியின் கட்சி என்று பொருள்.

அலி என்பவர் நபிகள் நாயகத்தின் மருமகன். முகமது நபி இறக்கும்போது அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. எனவே அவரது மகளின் கணவரான அலி என்பவரையே அவரது வாரிசாக ஏற்றுக் கொண்டனர் ஷியா பிரிவினர்.

ஆனால் உள்நாட்டுப் போர்களின் காரண மாக அலி கொல்லப்பட்டார். அவருடைய மகன்கள் (அதாவது நபிகள் நாயகத்தின் மகள் வழிப் பேரன்கள்) ஹாசன் மற்றும் உசேன். இவர்களுக்கே அடுத்த வாரிசுப் பதவி என்று ஷியா பிரிவினர் கருதினர். ஆனால் ஹாசன் எதிர்பாராத விதத்தில் இறந்தார்.

இவருக்கு விஷம் வைத்துக் கொன்றவர் முவாவியா (இவரே முதலாம் காலிஃப் அதாவது முஸ்லிம்களின் தலைவர்) என்று ஷியா பிரிவினர் கருது கிறார்கள். அலியின் மற்றொரு மகனான உசேன் யுத்தகளத்தில் கொல்லப்பட்டார்.

இப்போது உலகில் உள்ள ஷியா பிரிவினரின் எண்ணிக்கை சுமார் 15 கோடி. ஆனால் சன்னி பிரிவினரின் எண்ணிக்கை இதைப்போல சுமார் பத்து மடங்கு.

ஈரான், இராக், அஜர்பைஜான், ஏமன், பஹ்ரைன் போன்ற நாடுகளில் ஷியா பிரிவினர் மெஜாரிட்டியாக உள்ளனர்.

கி.பி.632-ல் முகமது நபி இறந்தபோது அவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருந்தது. அடுத்து இஸ்லாமிய மார்க்கத்தை தலைமை ஏற்று நடத்தக்கூடிய வாரிசு யார்?

முகமது நபிகள் குராஷ் இனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த இனத்தைச் சேர்ந்த, இஸ்லாமிய மார்க்கத்தில் பெருநம்பிக்கை கொண்ட ஒருவர்தான் வாரிசாக வேண்டும் என்று கருதியவர்கள் காலப்போக்கில் சன்னி பிரிவாக அறியப்பட்டனர். வாரிசு என்பவர் நபிகள் நாயகத்தில் ரத்த சம்பந்தம் உள்ளவர்களாகவே இருக்க வேண்டும் என்று வாதிட்ட பிரிவினர் நாளடைவில் ஷியா பிரிவாக அறியப்பட்டனர்.

தொடக்கத்திலேயே சில பிரச்சினைகள் உண்டாயின. நபிகள் நாயகத்தின் மாமனார் அபு பக்கர். இவர் அடுத்த வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் குராஷ் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஷியா பிரிவினரால் இதை ஏற்க முடியவில்லை. மாமனார் எப்படி நேரடி ரத்த சொந்தம் கொண்டவராக இருக்க முடியும்? எனவே அவரைத் தலைவராக ஏற்க முடியாது.

இப்படி ஏற்க மறுத்த பிரிவினர் நபிகள் நாயகத்தின் மாப்பிள்ளையும், மற்றபடி அவருக்கு ஒன்று விட்ட சகோதரனுமான அலியைத் தலைவராக அறிவித்தனர்.

நாளடைவில் அலி நான்காவது மதத் தலைவராக (காலிஃப்) அறியப்பட்டார். ஷியா, சன்னி ஆகிய இரு பிரிவினருமே அவரை மதித்தனர். ஆனால் ஷியா பிரிவைப் பொருத்தவரை முகமது நபிக்குப் பிறகு மிக முக்கியமான மதத் தலைவர் அலிதான். இடைப்பட்ட மூவர் அல்ல.

இஸ்லாமின் இரு பிரிவினருக்குமிடையே வேறொரு வேறுபாடும் உண்டு. நபிகள் நாயகத்தின் பேரனான உசேன் இறந்த தினத்தை ஆஷுரா தினம் (மொஹர்ரம்) என்று அனைத்து முஸ்லிம்களும் கருதி துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இது மேலும் முக்கிய தினம். நபிகள் நாயகத்தின் ரத்தவாரிசு ஒருவர் இறந்த தினம். எனவே அந்த தினத்தில் அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுவது, தன்னையே சாட்டையால் அடித்துக் கொண்டு துன்புறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.


அவர்களைப் பொருத்தவரை இது துக்கத்தின் வெளிப்பாடு. ஆனால் சன்னி பிரிவினர் இந்தச் செயல்பாடுகளை அங்கீகரிப்பதில்லை. சொல்லப் போனால் சில (சன்னிக்கள் ஆட்சி செய்யும்) நாடுகளில் இதுபோன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சரி, இஸ்லாமிய மார்க்கத்தின் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் ஏமனில் நடைபெறும் கலவரங்களுக்கும் என்ன தொடர்பு?


ஏமனை ஆட்சி செய்பவர் (செய்தவர்?) சன்னி பிரிவைச் சேர்ந்தவர். இந்த ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள் ஹவுதி என்னும் பிரிவினர். ஹவுதிக்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். யார் இந்த ஹவுதிக்கள் என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாமா?


ஹவுதிக்கள் என்று பரவலாக அழைக்கப்படும் இந்தப் பிரிவினரின் உண்மையான பெயர் அன்சர் அல்லா. 2004ல் ஒரு பெரும் தாக்குதல் உசேன் அல் ஹவுதி என்பவரின் தலைமையில் அரசின் மீது நிகழ்த்தப்பட்டது. இதன் காரணமாக ஏமன் நாட்டின் ராணுவத்தினர் பலரும் கொல்லப்பட்டார்கள். இந்த ஹவுதி என்பவரின் பெயரில்தான் அந்தப் பிரிவினர் அழைக்கப்படுகிறார்கள்.


உசேன் அல் ஹவுதி ஏமன் நாட்டு ராணுவத்தால் 2004 இறுதியில் கொல்லப்பட்டார். அவர் குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து ஐந்து கிளர்ச்சிகளில் ஈடுபட்டார்கள். ஒருவழியாக 2010-ல் அரசுடன் அமைதிக்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனாலும் அமைதி நிலவவில்லை.


2014ல் அப்துல் மாலிக் அல் ஹவுதி என்பவரின் தலைமையில் ஒரு குழு ஏமன் ஆட்சியாளர்களை சூழ்ந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது. அதில் ஓரளவு வெற்றியும் கிட்டியது. நாட்டின் பாராளுமன்றம் மட்டுமல்ல, தலைநகர் சனா முழுவதுமே கூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றது. இந்தப் பிரிவில் பெரும்பாலானவர்கள் வட ஏமனைச் சேர்ந்தவர்கள்.


சனாவை கைப்பற்றிய பிறகு ஹவுதிக்கள் பலவிதங்களில் முன்னேற திட்டமிட்டனர். தெற்குப் பகுதியில் உள்ள அடெல் என்ற நகரை அடைந்தார்கள். அங்கிருந்து கொண்டே ஒரு மாற்று அரசை நிர்ணயித்தார்கள்.


இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர்கள் செய்த அறிவிப்புகள் இவை. ‘’சீக்கிரமே ஏமன் நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்படும். எங்களின் தாற்காலிக அரசு உருவாக்கப்படும். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட எங்கள் தலைமைக் குழுதான் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஏமனை ஆட்சி செய்யும். மற்றதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’’.


இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். தானாக முன்வந்து இந்த ராஜினாமாக்கள் அளிக்கப்படவில்லை. அதிபர் மற்றும் பல பிரபலங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். வேறு வழியில்லாமல் அவர்கள் ராஜினாமா செய்யும்படி ஆனது.


ஆனால் ஹவுதிக்களின் அறிவிப்பை சன்னி பிரிவினர் ஏற்கத் தயாராக இல்லை. அவர்களைப் பொருத்தவரை அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பிரிவுதான் ஷியா (அல்லது ஹவுதி). அவர்கள் எப்படி மொத்த நாட்டையும் ஆள முடியும்? எனவே தெற்கு ஏமன் தலைவர்களும் நாட்டில் உள்ள சன்னி பிரிவினரும் பதிலுக்கு ஹவுதி பிரிவினரை கடுமையாக எச்சரித்தனர்.


இருதரப்புக்குமே நடந்த உள்நாட்டுப் போரில் அதிபர், கடந்த பிப்ரவரி மாதம் சனாவை விட்டு வெளியேறினார். ஏமன் நகரிலுள்ள ராணுவத்தினர் இரண்டாகப் பிரிந்திருக்கின்றனர். ஆளுக்கு ஒரு பிரிவை ஆதரிக்கிறார்கள்.


No comments:

Post a Comment

ESIC - SSO 2018 RECRUITMENT

EMPLOYEE STATE INSURANCE CORPORATION RECRUITMENT OF SOCIAL SECURITY OFFICER / MANAGER GRADE-II / SUPERINTENDENT IN ESI CORPORATION ...